கட்டுரை · தத்துவம்

நாம் ஏன் பிளேட்டோவிடமிருந்து தொடங்க வேண்டும்?

நாம் இன்றைக்கு கடைபிடிக்கும் நவீன அரசியல் கோட்பாடுகள், கண்டுள்ள அறிவியல் முன்னேற்றங்கள், மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றிற்கு மேற்கத்திய நாடுகளின் பெரும் பங்களிப்பு மிக முக்கியமான காரணம் என்று சொல்லலாம். கடந்த ஐந்நூறு ஆண்டுகால மேற்கத்திய சிந்தனையின் வீச்சு இன்றைக்கு அனைத்து துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது.
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க சிந்தனை மரபுதான் மேற்கத்திய சிந்தனை மரபின் தாய் என்று கூறவார்கள். அந்த கிரேக்க சிந்தனை மரபின் தலையாய சிந்தனையாளர்களில் முதன்மையானவர் சாக்ரடீஸின் மாணவரும் அரிஸ்டாட்டிலின் ஆசிரியருமான பிளேட்டோ.
எப்படி பண்டைய தமிழ்ச்சமூகத்தினைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் ஒருவர் படிக்க வேண்டுமோ அதைப் போல இன்றைய நவீன உலகைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கடந்த ஐந்நூறு ஆண்டுகால ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் அவர்கள் உருவாக்கிய சிந்தனை முறையையும் கற்றுக்கொள்ள வேண்டியது இன்றியமையாத ஒன்று.
அந்த ஐரோப்பிய சிந்தனை மரபின் துவக்கம் பண்டைய கிரேக்கத்திலிருந்து துவங்குவதால்தான் நமக்கு பிளேட்டோ முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார்.
பிளேட்டோவிடமிருந்து தொடங்க வேண்டிய மற்றொரு காரணம், இன்று உலகளவில் செல்வாக்கு செலுத்தும் பல அரசியல் மற்றும் தத்துவக் கருத்துக்கள் பிளேட்டோவின் சிந்தனைகளுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவை. இன்றைக்கு அறம், அரசியல், கல்வி, அறிவியல், சட்டம், ஜனநாயகம் போன்ற துறைகளில் நாம் நடத்தும் பல விவாதங்களின் வேர்களை பிளேட்டோவின் படைப்புகளில் காண முடியும். டெகார்ட், காண்ட், ஹெகல், மார்க்ஸ், நீட்சே போன்ற தத்துவஞானிகளில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையில் பிளேட்டோவின் எழுத்துக்களின் மூலமாக ஊக்கம் பெற்றவர்கள்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவரைப் புரிந்துகொள்ளாமல் மேற்கத்திய அறிவுசார் வரலாற்றைப் புரிந்துகொள்வது கடினம் என்று நாம் சொல்கிறோம்.
பிளேட்டோ எழுதிய பெரும்பாலான நூல்கள் உரையாடல் வடிவில்தான் அமைந்திருக்கும். பிளேட்டோவின் ஆசிரியரான சாக்ரடீஸ் பல்வேறு நபர்களிடம் மேற்கொண்ட உரையாடல்களையே அவருடைய காலத்திற்குப்பின் பல நூல்களாக எழுதி வெளியிட்டார் பிளேட்டோ. கிட்டத்தட்ட 35 நூல்கள் பிளேட்டோ எழுதியவை என்று கூறப்பட்டாலும் அதில் 25 முதல் 28 நூல்களையே பிளேட்டோவின் நூல்கள் என்று அறிஞர்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறார்கள். மற்றவை பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பிளேட்டோவின் The Republic எனப்படும் புகழ்பெற்ற நூல் இன்றைக்கும் பரவலாக வாசிக்கபடும் தத்துவ நூல்களில் ஒன்றாக உள்ளது. இந்நூல் பிளேட்டோவின் அரசியல் என்னும் தலைப்பில் திரு.வெ.சாமிநாத சர்மா அவர்களால் 1945-ஆம் ஆண்டிலும், பிளேட்டோவின் குடியரசு என்னும் தலைப்பில் திரு.ஆர்.இராமனுஜாசாரி அவர்களால் 1966-ஆம் ஆண்டிலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எங்களுடைய ஊர்க்கிணறு பதிப்பகத்தின் சார்பாக பிளேட்டோவின் அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்ப்பது என்று முடிவு செய்துள்ளோம். அதன் முதல் படியாக பிளேட்டோவின் மெனோ எனும் முக்கியமான நூலினை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவருடைய அனைத்து நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு உண்டான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
எப்படி மிகப்பெரிய கருத்துக்களையெல்லாம் திருவள்ளுவர் இரண்டே அடிகளில் மிக எளிமையாக நமக்குப் புரிய வைக்கிறாறோ அதே போல மிக ஆழமான தத்துவார்த்தக் கருத்துக்களை மிக மிக எளிமையாக புரியவைப்பதில் பிளேட்டோ வல்லவர். அந்த எளிமைதான் அவருடைய நூல்களில் காணப்படும் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். “நாம் ஏன் பிளேட்டோவிடமிருந்து தொடங்க வேண்டும்?” என்ற கேள்விக்கான பதிலும் அதில்தான் அடங்கியுள்ளது.
